கடுமையாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில், பெயரளவுக்கு சிறு சலுகைகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. இந்த மின் கட்டணக் குறைப்பு அறிப்பால், 500 யூனிட்டுக்குள் மின் பயன்பாடு உள்ளவர்களுக்கு மட்டும், பலன் கிடைத்துள்ளது. அதற்கு மேல் பயன்படுத்தும் நடுத்தர மக்களுக்கு, அரசின் எவ்வித மானியமும் கிடைக்காது என்பதால், அவர்களுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும்.
தமிழகம் முழுவதும், கடந்த, 1ம் தேதி முதல், புதிய மின் கட்டணம் அமலுக்கு வந்தது. கட்டண உயர்வு அதிகமாக உள்ளதாக, அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அரசின் மானியத் தொகையை அதிகரித்து, வீடுகளுக்கான மின் கட்டணக் குறைப்புக்கு முதல்வர் ஜெயலலிதா, நேற்று உத்தரவிட்டுள்ளார்.
நடுத்தர பிரிவினருக்கு :கண் துடைப்பாக அறிவிக்கப்பட்டள்ள இந்த கட்டணக் குறைப்பால், வீட்டு இணைப்பில், இரு மாதங்களுக்கு, 500 யூனிட்டுக்குள் பயன்படுத்துவோருக்கு, பெரும் தொகை மிச்சமாகும். சிறு குடும்பங்களில், இரு மாத மின் நுகர்வு, 300 முதல், 400 யூனிட் வரையே உள்ளதால், அவர்களுக்கு பலன் அளிக்கும். உதாரணமாக, இரு மாதங்களுக்கு, 400 யூனிட் ஒருவர் பயன்படுத்தினால், 30ம்தேதி ஆணையம் அறிவித்த கட்டண உயர்வுப்படி, 0 - 200 யூனிட் வரை, மூன்று ரூபாயும்; 201 - 400 வரையில் யூனிட்டுக்கு, நான்கு ரூபாய் என்ற வகையில், 1,400 ரூபாய் செலுத்த வேண்டும். இதில், அரசு முன்பு வழங்கிய மானியத்தை கழித்தால், 1,300 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்திலும், முதல்வர் நேற்று குறைப்பு செய்துள்ள நிலையில், 400 யூனிட் பயன்படுத்தினால், 1,000 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.ஆனால், இரு மாதங்களுக்கு, 500 யூனிட்டுக்கு மேல் மின் பயன்பாடு இருக்குமானால், இவர்களுக்கு அரசின் மானியம் எதுவும் கிடைக்காது என்பதால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த கட்டண உயர்வை, அப்படியே செலுத்த வேண்டும்.
2 யூனிட்டுக்கு 508 ரூபாய்:உதாரணமாக, 501 யூனிட் மின்சாரத்தை ஒருவர் பயன்படுத்தினால், அவர் 0 - 200 யூனிட் வரையிலான உபயோகத்திற்கு ஆணையம் நிர்ணயித்த மூன்று ரூபாயும், 201 - 500 யூனிட்டிற்கு நான்கு ரூபாய் வீதமும், யூனிட்டிற்கு 5.75 வீதமும் கட்டணமாக செலுத்த வேண்டும். அதாவது, 501 யூனிட் பயன்படுத்தினால், 1,805.75 ரூபாயை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.அதே நேரத்தில், அவர் இரு யூனிட் தனது உபயோகத்தைக் குறைத்து, 499 யூனிட் பயன்படுத்தினால், அவருக்கு அரசின் மானியம் கிடைக்கும்; அதன் மூலம், 1,297 ரூபாய் மட்டும் கட்டணமாகச் செலுத்தினால் போதுமானது.இரண்டு யூனிட் மின்சாரத்தை கூடுதலாக பயன்படுத்தினால், 508.75 ரூபாயை கூடுதலாக செலுத்த நேரிடும். மிக்சி, பேன், கிரைண்டர், ஏசி பிரிட்ஜ், டிவி போன்ற மின்சாதனப் பொருட்கள் இல்லாத நடுத்தர வீடுகளே இல்லை. இவர்கள் மிகக் குறைந்த நேரமே இவற்றை பயன்படுத்தினாலும், இரண்டு மாதங்களுக்கு மின் உபயோகம், 500 யூனிட்களை தாண்டி விடும். எனவே, அரசு அறிவித்த மின் கட்டணக் குறைப்பு நடுத்தர மக்களுக்கு கிடைக்காது.
வாடகைதாரர் பாடு திண்டாட்டம்:ஒரு மின்சார இணைப்பு பெற்றுள்ள வீட்டின் உரிமையாளர், அதை நான்கு வாடகைதாரர்கள் குடியிருக்கும் வீடுகளின் பயன்பாட்டுக்கு வழங்குவது வாடிக்கையாக இருக்கிறது.சராசரியாக, ஒவ்வொரு வீட்டிலும், 200 யூனிட் உபயோகப்படுத்தினால், 800 யூனிட்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். 500 யூனிட்டுகளுக்கு மேல் அரசின் மானியம் கிடைக்காது என்பதால், கட்டணம் கடுமையாக இருக்கும்.ஏற்கனவே, வீட்டு உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வரும் நிலையில், இந்த புதிய கட்டண விகிதத்தால், வாடகைதாரர்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாற்று வழி என்ன?பெரும் எண்ணிக்கையில் உள்ள வாடகைதாரர்களின் இன்னலை தீர்த்தால் தான், அரசின் கட்டணக் குறைப்பு முயற்சிக்கு பலன் கிடைக்கும். எனவே, ஒரு வீட்டு இணைப்பு பெற்றுள்ளவர், அதிகபட்சமாக மற்றொரு வீட்டுக்கு மட்டும் இணைப்பு தந்து, அதை , சப்- மீட்டர் மூலம் கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கலாம் என்ற புதிய உத்தரவை, அரசு பிறப்பிக்க வேண்டும்.இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பின், கூடுதலாக புதிய இணைப்பை கட்டாயம் பெற வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டால், ஒரே இணைப்பில் மின் வசதி பெறும் வாடகைதாரர்கள், கட்டண உயர்வில் இருந்து தப்புவர்.புதிய இணைப்பைப் பெற கட்டாயமாக்கும் போது, கூடுதலாக டெபாசிட் தொகையும் மின்சார வாரியத்திற்கு கிடைக்கும். வாடகைதாரர்கள் நலன் கருதி அரசு, இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment